திண்டுக்கல்லில் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை
திண்டுக்கல்லில் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்லை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் ராமசாமி காலனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 51). இவர், குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு தனலட்சுமி (50) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். செந்தில்குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக மருத்துவ விடுப்பில் அவர் வீட்டில் இருந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் தனலட்சுமி கோபித்து கொண்டு அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட செந்தில்குமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது தற்கொலை செய்த செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.