500 வாழைகளை நாசம் செய்த யானை கூட்டம்


500 வாழைகளை நாசம் செய்த யானை கூட்டம்
x

பூதப்பாண்டி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்த யானை கூட்டம் 500 வாழை மரங்களை நாசம் செய்தன.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்த யானை கூட்டம் 500 வாழை மரங்களை நாசம் செய்தன.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

யானை கூட்டம்

பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், விவசாயி. இவர் தாடகை மலை அடிவாரத்தில் உள்ள உடையார்கோணம் பகுதியில் சுமார் 1½ ஏக்கர் நிலப்பரப்பில் 1,200 வாழைகள் நட்டுள்ளார்.

இந்த வாழை தோட்டத்தில் கடந்த மாதம் புகுந்த யானை கூட்டம் 700 வாழை மரங்களை துவம்சம் செய்து சென்றன.

இதுகுறித்து மணிகண்டன் வனத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறைகளிடம் நிவாரணம் கேட்டு மனு அளித்தார். ஆனால் இதுவரையில் நிவாரணம் கிடைக்கவில்லை. வாழை தோட்டத்துக்குள் யானைகள் வராமல் இருக்க தடுப்பு அமைத்து தரப்படும் என்றும் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை தடுப்பும் அமைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

500 வாழைகள் நாசம்

வாழைத்தோட்டத்தில் யானைகள் துவம்சம் செய்தது போக மீதம் இருந்த 500 வாழை மரங்களை மணிகண்டன் பராமரித்து வந்தார். வாழை குலை தள்ளிய நிலையில் இருந்தன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் யானைக்கூட்டம் மணிகண்டன் தோட்டத்தில் புகுந்தது. அவை மீதமிருந்த 500 வாழை மரங்களையும், 10 தென்னை மரங்களையும் பிடுங்கி போட்டு, நாசம் செய்து விட்டு காட்டுக்குள் சென்று விட்டன. வழக்கம் போல் மணிகண்டன் நேற்று காலை தோட்டத்துக்கு சென்றார். அப்போது வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் நாசமாகி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி விவசாயி மணிகண்டன் கூறும்போது, 'அனைத்து வாழைகளையும் யானைகள் நாசம் செய்து விட்டன. எனக்கு நிவாரணம் வழங்க வேண்டும்' என்று அவர் சோகத்துடன் கூறினார்.


Next Story