யானையை ஐகோர்ட்டு நீதிபதி பார்வையிட்டார்
விருதுநகரில் உடல் நலம் பாதிப்படைந்த யானையை ஐகோர்ட்டு நீதிபதி பார்வையிட்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
விருதுநகரில் உடல் நலம் பாதிப்படைந்த யானையை ஐகோர்ட்டு நீதிபதி பார்வையிட்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
பாதிப்படைந்த யானை
விருதுநகருக்கு தேனி மாவட்டத்தில் இருந்து கடந்த ஜனவரி 1-ந் தேதியன்று வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புக்காக பெண் யானை லலிதா கொண்டுவரப்பட்டது. ஆனால் யானை லாரிகளில் இறக்கப்படும்போது வழுக்கியதாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு விருதுநகரிலேயே இருந்தது.
மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) கோவில்ராஜா தலைமையில் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் யானையின் உடல் நலம் சீராகவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசின் வனத்துறை தலைமை காப்பாளர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் சீனிவாசா ஆர்.ரெட்டி, மேகமலை வன உயிரின காப்பகத்துணை இயக்குனர் யானையை பொறுப்பில் எடுத்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
நீதிபதி பார்வையிட்டார்
இதனை தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் வந்து யானையை பார்த்து சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இதுபற்றி தகவல் அறிந்து விருதுநகருக்கு நேரில் வந்து பெண் யானை லலிதாவை பார்வையிட்டு யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை பற்றி யானைப்பாகனிடம் கேட்டறிந்தார்.
மேலும் யானையை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என யானைப்பாகனிடம் அவர் கண்டிப்புடன் கூறினார். யானை லலிதாவுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்த பிராணிகள் நல ஆர்வலர் சுனிதா, நீதிபதியிடம் யானைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், தற்போது சிகிச்சை அளிக்க எடுத்த நடவடிக்கை குறித்தும் வனத்துறையினர் பொறுப்பில் யானையை ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது குறித்தும் விளக்கி கூறினார்.