தேயிலை வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயிக்க கோரி குன்னூரில் உள்ள தேயிலை வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோத்தகிரி,
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயிக்க கோரி குன்னூரில் உள்ள தேயிலை வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பச்சை தேயிலை
நீலகிரி மாவட்ட சிறு விவசாயிகள் சங்கம் சார்பில், கடந்த ஒரு மாத காலமாக பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்க வலியுறுத்தி மாவட்டம் தழுவிய போராட்டம் நடத்துவதற்காக அனைத்து கிராமங்களிலும் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்று வந்தது. அதன் கடைசி கூட்டம் கக்குச்சி கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் போஜன் தலைமை தாங்கினார்.
11 ஊர்த் தலைவர் நஞ்சா கவுடர், ஆண்டிகவுடர், அருணா நந்தகுமார், 94 ஊர் பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.50 விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயிக்க வேண்டும்.
உண்ணாவிரத போராட்டம்
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், குன்னூரில் உள்ள தேயிலை வாரியம் முன்பு வருகிற செப்டம்பர் 14-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் நீலகிரி மாவட்டம் முழுவதும் இருந்து 30 ஆயிரம் விவசாயிகள் பங்குபெற வேண்டும். வருவாய்த்துறை மற்றும் வனத்துறையின் எவ்வித தலையீடும் இன்றி, விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பயிரிட்டு உள்ள சில்வர் ஓக் மரங்களை தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக வெட்டி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளின் பட்டா நிலங்களை உட்பிரிவு செய்து தனி பட்டாவாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சதீஷ் நன்றி கூறினார்.