கடன் சுமையால் நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கடன் சுமையால் நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மலைக்கோட்டை:
நகை செய்யும் தொழிலாளி
திருச்சி கோட்டை பகுதியில் உள்ள சவுந்தர பாண்டியன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கணேஷ்(வயது 37). நகை செய்யும் தொழிலாளியான இவர், தனது வீட்டிலேயே ஒரு பகுதியில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரியான முறையில் வேலை இல்லாததால் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்க முடியாமலும், எல்.ஐ.சி.யில் வாங்கிய கடனை சரியான முறையில் கட்ட முடியாததாலும் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் இருந்த மின்விசிறி கொக்கியில் கயிற்றால் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கலைச்செல்வி (வயது 32) கொடுத்த புகாரின்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை
*திருச்சி தாராநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன்(62). தையல் தொழிலாளியான இவர், பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன் நடராஜனின் மனைவி மாயமாகிவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட நடராஜன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
* திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(31) சம்பவத்தன்று காலை இவர் தனது மொபட்டை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மாலையில் பார்த்த போது மொபட்டை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மொபட்டை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வரதட்சணை கொடுமை
* திருச்சி அரியமங்கலம் மற்றும் பாலக்கரை பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக அரியமங்கலத்தை சேர்ந்த பிரபாகரன் (42), பாலக்கரையை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு விற்ற தொகை ரூ.1,090-ஐ பறிமுதல் செய்தனர்.
* கடலூரை சேர்ந்தவர் கீர்த்தனா (34). இவருக்கு திருச்சியை சேர்ந்த வைரம்-லதா தம்பதியின் மகன் சுதனுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் திருமணத்தின் போது 110 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகளை பெண்வீட்டார் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால், சுதன் மற்றும் அவருடைய பெற்றோர் கூடுதலாக பணம், கார், நகைகளை வரதட்சணையாக கேட்டு அவரை கொடுமை படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சுதன் மற்றும் அவருடைய பெற்றோர் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
* திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் பிரகாஷ் (26). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு மேலப்புதூர் பாலத்தில் நடந்து சென்றபோது, 3 வாலிபர்கள் குடிபோதையில் கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த லியோஅமல்ராஜ் (21), நெல்சன் (29), டேனியல்சாமி (21) ஆகியோரை கைது செய்தனர்.