கிணற்றில் குளித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி சாவு
ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் குளித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி இறந்து போனார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் குளித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொழிலாளி
ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் கீழத்தெருவை சேர்ந்த மாடசாமி மகன் ரமேஷ் (வயது 34). கூலி தொழிலாளி. இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தினமும் வேலைக்கு செல்லும் இவர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த மனைவி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
இந்த நிலையில், இவர் நேற்று காலையில் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வி.தளவாய்புரம் பகுதியில் கூலி வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் நண்பர்களுடன் சேர்ந்து அவர் மது குடித்ததாக கூறப்படுகிறது.
கிணற்று தண்ணீரில் மூழ்கினார்
பின்னர் வி.தளவாய்புரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அவர் சென்றுள்ளார். அந்த கிணற்றில் ஏற்கனவே அவரது நண்பர்கள் சிலர் குளித்து கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் கிணற்றிலுள்ள தண்ணீரில் இறங்கி குளித்த அவர் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவர் தண்ணீரில் மூழ்கி குளிப்பதாக நண்பர்கள் நினைத்து கொண்டிருந்துள்ளனர். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் தண்ணீருக்கு வெளியே வராததால் பதறிப்போன நண்பர்கள் பசுவந்தனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து பசுவந்தனை போலீசார் மற்றும் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்றனர்.
உடல் மீட்பு
தீயணைப்பு வீரர்கள் அந்த கிணற்றுக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரமேஷ் கிணற்றுக்கு அடியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கிணற்றுக்கு வெளியே கொண்டு வந்தனர். அந்த உடலை பெற்றுக்கொண்டு பசுவந்தனை போலீசார், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து பசுவந்தனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .