அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி சாவு
ஆம்பூர் அருகே அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஆம்பூர்
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 62). கூலித் தொழிலாளி. இவர் மனைவி மல்லிகாவுடன் மாதனூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்புவதற்காக மாதனூர் பஸ் நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் அரசு பஸ் வந்தது.
மனைவி முதலில் பஸ்சில் ஏறியதும் குமாரசாமி அதன்பின் பஸ்சில் ஏறினார்.
பஸ் புறப்பட்டபோது படிக்கட்டில் இருந்து குமாரசாமி கீழே தவறி விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு குமாரசாமி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது குறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.