விபத்தில் கூலி தொழிலாளி பலி
கொட்டாம்பட்டி அருகே நடந்த விபத்தில் கூலி தொழிலாளி பலியானார்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டியை அடுத்துள்ள பூதமங்கலம் பொட்டபட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 39). விவசாய கூலி தொழிலாளி. இவர் சுக்காம்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கருங்காலக்குடி சென்றார்.. மீண்டும் பொட்டப்பட்டிக்கு வந்த போது வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் செல்வம், சண்முகம் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சண்முகத்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.