மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் பெண் தர்ணா


மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் பெண் தர்ணா
x

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டித்து, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

திண்டுக்கல்

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டித்து, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் இன்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நிலக்கோட்டை தாலுகா நூத்துலாபுரத்தை சேர்ந்த சின்ன பாண்டியம்மாள் (வயது 52) என்பவர், தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். திடீரென அவர், கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.

மின் இணைப்பு துண்டிப்பு

அப்போது அவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முறையான ஆவணங்களை சமர்ப்பித்து எனது வீட்டுக்கு மின் இணைப்பு பெற்றேன். இந்தநிலையில் நான் சமர்ப்பித்த ஆவணங்கள் ஏற்புடையதாக இல்லை எனக்கூறி, மின்வாரிய அதிகாரிகள் எனது வீட்டுக்கான மின் இணைப்பை துண்டித்து விட்டனர்.

இதனால் என்னுடைய குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே மீண்டும் மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்திய போலீசார், பிரச்சினை குறித்து கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

தமிழில் கும்பாபிஷேக வழிபாடு

இதேபோல் சீலப்பாடி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், வீட்டுமனை பட்டா கேட்டு 7 ஆண்டுகளாக விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே விரைவில் பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக பூஜை நிகழ்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர் கொடுத்த மனுவில், பட்டிவீரன்பட்டி பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் கையுறை அணியாமல் அப்பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தூய்மை பணியாளர்களுக்கு கையுறை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

185 மனுக்கள்

மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 185 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்பட 20 பேருக்கு கூட்டுறவுத்துறை மூலம் தொழில் தொடங்க ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் கடன் தொகைக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story