விஷம் குடித்து வந்த பெண்ணால் பரபரப்பு
விஷம் குடித்து வந்த பெண்ணால் பரபரப்பு
திருப்பூர்
திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் குமார். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி உஷா (வயது 36). இவருடைய பக்கத்து வீட்டில் 2 பெண்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தி இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். அதில் ஒரு பெண்ணுக்கு சாதகமாக உஷா இருந்ததாக தெரிகிறது. இதனால் மற்றொரு பெண்ணுக்கும், உஷாவுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவரும் மாறி, மாறி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுப்பதாக சத்தம் போட்டுள்ளனர். இந்தநிலையில் உஷா நேற்று மதியம் 12½ மணி அளவில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த பையில் உள்ள சிறிய பாட்டிலில் மண்எண்ணெய் இருந்துள்ளது. நுழைவுவாசலில் நின்ற போலீசார் அதை பறிமுதல் செய்து விசாரித்தபோது, தான் வீட்டில் இருந்து வரும்போது விஷம் குடித்து வந்ததாகவும், கமிஷனரை பார்த்து மனு கொடுக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.உடனடியாக அங்கிருந்த போலீசார், உஷாவை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.