பலத்த மழையால் வீடு இடிந்து பெண் படுகாயம்
பலத்த மழையால் வீடு இடிந்து பெண் படுகாயம்
சேவூர்,
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் சேவூர் ஊராட்சி பாளியக்காடு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சந்திரன் (வயது 47) என்ற ஆட்டோ டிரைவரின் வீடு மிகவும் பழுதடைந்து இருந்தது. இதனால் அந்த வீட்டருகே புதிதாக வீடு கட்டி அங்கு வசித்து வருகிறார். இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக நேற்று காலை 7 மணியளவில் சந்திரனின் பழைய வீட்டின் சுவர் இடிந்து அருகில் உள்ள பட்டான் என்பவரது வீட்டின் மீது விழுந்தது. இதில் பட்டானின் மாமியார் அம்மணி பொன்டு (58) கட்டிட இடிபாடுகளில் சிக்கினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த வருவாய் துறையினர், அம்மணி பொன்டு குடும்பத்தினருக்கு நிவாரண உதவி தொகை வழங்கினர்.
---