கரைமடி வலைகளில் ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின


கரைமடி வலைகளில் ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் கரைமடி வலைகளில் ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்்.

கன்னியாகுமரி

குளச்சல்,

குளச்சலில் கரைமடி வலைகளில் ஏராளமான நெத்திலி மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்்.

மழை

குளச்சலை தங்குதளமாக கொண்டு சுமார் 300 விசைப்படகுகளிலும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களிலும் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்கள். விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.

ஆனால் பைபர் வள்ளங்கள் மாலை கடலுக்கு சென்று மறுநாள் காலை கரைக்கு திரும்பும். குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை பெய்தது. காற்று வீசவில்லை. இதனால் வழக்கம்போல் நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற வள்ளங்கள் நேற்று காலை கரை திரும்பின. இதில் நெத்திலி, அயரை, சாளை, ஊளா போன்ற மீன்கள் கிடைத்தன.

நெத்திலி மீன்கள்

நேற்று காலையிலும் மழை தூறல் போட்டது. இதனால் கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன. இவற்றுள் ஏராளமான நெத்திலி மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர்.

ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.1000 முதல் ரூ.1300 வரை விலை போனது. இதனை உள்ளூர் மீன் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர். கடந்த வாரத்திற்கு முன்பு ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.700 முதல் ரூ.1000 வரைதான் விலைக்கு போனது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இது குறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:-

பாதிக்காது

கரைமடி வலைகள் மூலம் அருகில் மீன்பிடித்து விட்டு கரை திரும்புவதால் தொழில் பாதிக்காது. காற்று வீசினால்தான் பைபர் படகுகள் கடலுக்கு செல்ல முடியாது. நேற்று மழை மட்டும் பெய்தது. காற்று வீசவில்லை.

கடலில் கரைமடி வலையை கட்டுமரம் மூலம் அதிகாலையில் கடலுக்குள் வீசி வருவார்கள். பின்பு வீசிய வலையை சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைமடி வலையை இழுப்பார்கள். அதில் பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கும். இன்று கரைமடி வலையை இழுத்து கரைக்கு கொண்டு வந்ததில் நெத்திலி மற்றும் சாளை மீன்கள் ஏராளமாய் கிடைத்தன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story