மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கும் பலவகையான நண்டுகள்
கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் பலவகையான நண்டுகள் சிக்கி வருகின்றன. இந்த நண்டுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வேதாரண்யம்:
கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் பலவகையான நண்டுகள் சிக்கி வருகின்றன. இந்த நண்டுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மீன்பிடி சீசன்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் இந்த ஆண்டு மீன்பிடி சீசன் மிக மந்தமாக காணப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் புயல் மழை மற்றும் பல்வேறு காரணங்களால் மீன்பிடி சீசன் மிக மந்தமான நிலையிலேயே காணப்பட்டது
அதிக அளவில் சிக்கும் மீன்கள்
மீன்பிடி சீசன் முடிவடையும் நிலையில் தற்போது மீன்கள் அதிக அளவில் சிக்கி வருகிறது. மீனவர்கள் வலையில் அதிகளவு நண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் சிக்குவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சீசன் தொடங்கியது முதல் மீன் வரத்து குறைவாக இருந்த நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு மீன்பிடி சீசன் களைக்கட்டி வருவதால் ஷீலா, காலா, வாவல், மூரல், திருக்கை, மத்தி, கலர்மீன் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அதிக அளவு கிடைப்பதால், இங்கிருந்து கேரளாவிற்கு அதிக அளவில் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
பல வகையாக நண்டுகள்
கோடியக்கரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் அதிக விலைபோகும் கல்நண்டு, பார் நண்டு, பிஸ்கட் நண்டு, மூன்று புள்ளி நண்டு, சிலுவை நண்டு, நீலக்கால் நண்டு, பேய் நண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான நண்டுகள் சிக்கின.
இந்த நண்டுகள் சீனா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒரு கிலோ பிஸ்கட் நண்டு ரூ.120-க்கும், சிலுவை நண்டு ரூ.150-க்கும், மூன்று புள்ளி நண்டு ரூ.270-க்கும், நீலக்கால் நண்டு ரூ.540-க்கும். பேய் நண்டு ரூ.100-க்கும் விற்பனையானது. கோடியக்கரை பகுதியில் பலவகையாக நண்டுகள் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
இது குறித்து கோடியக்கரை மீனவர் நல சங்க முன்னாள் செயலாளர் சித்திரவேல் கூறுகையில், கோடியக்கரையில் சீசன் முடிய இன்னும் ஒரு சில தினங்கள் உள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 20 டன்னுக்கு மேல் சிறிய வகை மீன்களான கடல் கொய் கிடைக்கிறது.
மேலும் கல் நண்டு, சிலுவை நண்டு, புள்ளி நண்டு, பேய் நண்டு, நீலக்கால் நண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான நண்டுகள் கிடைக்கின்றன இந்த நண்டுகளுக்கு நல்ல விலை கிடைப்பதாலும், அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ெசய்யப்படுவதாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.