ஆடிஅமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடிஅமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
திருச்செந்தூர்:
ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடற்கரைகள், தெப்பக்குளக்கரைகளில் பொதுமக்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
ஆடி அமாவாசை
ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த அமாவாசையாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்ய உகந்த நாளாக விளங்கி வருகிறது. இதனால் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தர்ப்பணம் செய்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடற்கரைகளில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதே போன்று மாவட்டம் முழுவதும் தாமிரபரணி ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மூடப்பட்டு இருந்தன.
தர்ப்பணம்
இந்த ஆண்டு கொரோனா தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு இருப்பதால், மக்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடற்கரை, ஆற்றங்கரைகளில் குவிந்தனர். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடற்கரை பகுதியில் காலை முதல் ஏராளமான மக்கள் குவியத் தொடங்கினர். தொடர்ந்து மக்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதே போன்று மாவட்டம் முழுவதும் அனைத்து நீர் நிலைகளிலும் நேற்று வழக்கம் போர் தர்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
திருச்செந்தூர் கடற்கரை
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. 7.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. மீண்டும் சண்முகவிலாச மண்டபத்திற்கு வந்த சுவாமி அஸ்திரதேவருக்கு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
சிப்பிகுளம் கடற்கரை
இரண்டாவது ராமேசுவரம் என்று போற்றப்படும் சிப்பிக்குளம் கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணி முதலே விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்டனர். கடலில் புனித நீராடியபின், கடற்கரையில் எள், பூ, தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பூஜை நடத்தி, வழிபட்டு பின் பிண்டத்தினை சிப்பிக்குளம் கடலில் கரைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதனையடுத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள் சிப்பிகுளம் அருகே உள்ள வைப்பாறு கிராமத்தில் பிரசித்திபெற்ற விசாலாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர். இதனால் இப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
எட்டயபுரம் தெப்பக்குளத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்
கோவில்பட்டி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளம் சித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி காலை 6 மணி முதல் தொடங்கியது. இதற்காக வளாகத்தில் சாமியானா பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. புரோகிதர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடுகள் நடத்தினா். இதில் ஏராளமான பொதுமக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். அதேசமயம் கோவில் தெப்பகுளத்தில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கயத்தாறு
கயத்தாறில் ஆடி அமாவாசை முன்னிட்டு அகிலாண்ட ஈஸ்வரி, சமேத கோதண்டராமேஸ்வரர் கோவில் வளாகத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான மக்கள் குடும்பத்தினருடன் குவிந்து முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.