ஒரு எலுமிச்சை பழம் ரூ.31,500-க்கு ஏலம்


ஒரு எலுமிச்சை பழம் ரூ.31,500-க்கு ஏலம்
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 11:29 PM IST)
t-max-icont-min-icon

ரத்தினவேல் முருகன் கோவிலில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.31,500-க்கு ஏலம்போனது. பக்தர்கள் போட்டிப்போட்டு எடுத்தனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்திபெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.

இதில் முதல் 9 நாள் நடைபெறும் திருவிழாவின்போது இரட்டைக்குன்று முருகன் அருகில் அமைந்துள்ள வேல் மீது ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சை பழம் வைக்கப்படும்.

பின்னர் இந்த எலுமிச்சை பழங்களை பத்திரமாக எடுத்து வைத்து 11 நாள் திருவிழா முடிந்ததும் நள்ளிரவில் ஏலம் விடுவார்கள். இந்த பழத்தை ஏலம் எடுப்பவர்கள் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும், தொழில் விருத்தியடையும், நினைத்தது நடைபெறும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கை ஆகும்.

போட்டிப்போட்டு ஏலம்

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 1-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், 2-ந்தேதி கரக திருவிழாவும், 3-ந்தேதி தேரோட்டமும், 4-ந் தேதி காவடி ஊர்வலமும் நடந்தது.

இந்த திருவிழாவின்போது வேல் மீது வைத்திருந்த 9 எலுமிச்சை பழங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏலம் விடப்பட்டது. இதனை மரசெருப்பின் மீது ஏறி நின்று நாட்டாமை புருஷோத்தமன் ஏலம் விட்டார். இதனை ஏலம் எடுப்பதற்காக சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்தும், சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டனர்.

9 எலுமிச்சை பழங்கள் ரூ.69,800

அதன்படி முதல் நாள் எலுமிச்சை பழத்தை குழந்தை இல்லாத புதுச்சேரியை சேர்ந்த ஒரு தம்பதியினர் ரூ.31 ஆயிரத்து 500-க்கு ஏலம் எடுத்தனர். 2-ம்நாள் ரூ.6 ஆயிரத்து 300-க்கும், 3-ம் நாள் பழம் ரூ.10 ஆயிரத்து 100-க்கும், 4-ம் நாள் பழம் ரூ.5 ஆயிரத்துக்கும், 5-ம் நாள் பழம் ரூ.6 ஆயிரத்துக்கும், 6-ம் நாள் பழம் ஆயிரம் ரூபாய்க்கும், 7-ம் நாள் பழம் ரூ.6 ஆயிரத்துக்கும், 8-ம் நாள் பழம் ரூ.1600-க்கும், 9-ம் நாள் பழம் ரூ.2 ஆயிரத்து 300-க்கும் ஏலம் போனது. 9 எலுமிச்சை பழங்கள் மொத்தம் ரூ.69 ஆயிரத்து 800-க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.


Next Story