தேவாலா அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுத்தை சாவு


தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவாலா அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுத்தை பரிதாபமாக இறந்தது.

நீலகிரி

கூடலூர்

தேவாலா அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுத்தை பரிதாபமாக இறந்தது.

கிணற்றுக்குள் தவறி விழுந்தது

கூடலூர் தாலுகா தேவாலா அருகே கோட்டவயல் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது தோட்டத்தில் குடிநீர் தரைக்கிணறு உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விஜயலட்சுமி குடும்பத்தினர் தண்ணீர் எடுக்க சென்றனர். அப்போது கிணற்றுக்குள் சிறுத்தை ஒன்று விழுந்து கிடப்பது தெரிய வந்தது.

தகவலறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது தண்ணீர் குடிப்பதற்காக சிறுத்தை அப்பகுதிக்கு வந்த போது தவறி கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் கிணற்றுக்குள் பிடித்து கொள்ள வேறு வழி இல்லாததால் தண்ணீரில் தத்தளித்தவாறு மூச்சு திணறி உயிரிழந்தது தெரிய வந்தது.

2 வயது பெண் சிறுத்தை

பின்னர் இரவு நேரம் ஆகிவிட்டதால் வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர். நேற்று காலை முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேரில் வந்து கிணற்றுக்குள் விழுந்து உயிரழந்து கிடந்த பெண் சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர்.

தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் முக்கிய உடற்பாகங்களை சேகரித்து விட்டு சிறுத்தை புலியின் உடலை தீ மூட்டி எரித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, சுமார் 2 வயது பெண் சிறுத்தை தண்ணீர் அல்லது இரையை விரட்டி வந்த சமயத்தில் கிணற்றுக்குள் விழுந்து மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story