பவானிசாகர் அருகே வீட்டின் முன்பு கட்டியிருந்த கன்றுக்குட்டியை அடித்து கொன்ற சிறுத்தை
பவானிசாகர் அருகே வீட்டின் முன்பு கட்டியிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்து கொன்றது.
பவானிசாகர்:
பவானிசாகர் அருகே உள்ள புதுப்பீர்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 58). விவசாயி. இவருடைய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. சுப்புராஜ் தன்னுடைய தோட்டத்தில் 11 மாடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு பசுமாடுகளை கட்டி வைத்துவிட்டு வீட்டுக்குள் தூங்கச்சென்றுவிட்டார். நேற்று காலை மாடுகள் கட்டியிருந்த இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது ஒரு பசுங்கன்றுக்குட்டி கழுத்து, வால் பகுதியில் படுகாயங்களுடன் ரத்தம் வழிய செத்துக்கிடந்தது.
கன்றுக்குட்டி செத்துக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்புராஜ் உடனடியாக பவானிசாகர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கால் தடயங்களை ஆய்வு செய்தார்கள். அதன்பின்னர் அவர்கள் கன்றுக்குட்டியை வேட்டையாடியது சிறுத்தை என்று தெரிவித்தார்கள். மேலும் பாதிப்புக்கு உள்ளான சுப்புராஜ்க்கு உரிய இழப்பீடு பெற்றுத்தருவதாக கூறினார்கள்.
கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் சிறுத்தை அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆடு, பசுமாடு, காவல் நாய் என தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.