மலைப்பாதையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை
ஆம்பூர் அருகே மலைப்பாதையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஆம்பூர் வனச்சரகத்தில் அதிகளவில் வனவிலங்குகள் உள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் ஆம்பூர் வனச்சரகத்தில் உள்ள காப்புக்காடுகள், நாயக்கனேரி மலைக்காடுகள் பச்சை பசேலென்று காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையை விரும்பி பல்வேறு வனவிலங்குகள் இடம் பெயர்வதாக தெரிகிறது.
இந்தநிலையில் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி பகுதியில் உள்ள மலைச்சாலையில் ஒற்றை காட்டுயானை நடமாடுகிறது. அந்த வழியாக ெசல்லும் மலைக் கிராம மக்களை காட்டுயாைன அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அந்தக் காட்டுயானை மலைப்பாதையின் நடுவே நின்று கொண்டு வாகனங்களை மறிக்கிறது. மலைப்பாதையில் ஒற்றை காட்டுயானை நின்று கொண்டிருப்பதால் மலைக் கிராம மக்கள் அச்சப்பட்டு மழையில் இருந்து கீழே இறங்காமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நாயக்கனேரி மலைப்பாதையின் நடுரோட்டில் ஒன்றை காட்டுயானை நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்தது. இதைக் கண்ட மலைக்கிராம மக்கள் கூச்சலிட்டபடி காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மலைப்பாதையை ஒட்டியே ஒற்றை காட்டுயானை இருப்பதால், மலைக்கிராமங்களில் இருந்து ஆம்பூருக்கு வரும் பள்ளி மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர். சில பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். ஒற்றை காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.