அடிப்படை வசதிக்காக ஏங்கும்மலைக்கிராம மக்கள்
கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியில் அடிப்படை வசதிக்காக மலைக்கிராம மக்கள் ஏங்குகின்றனர். சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சேதம் அடைந்த தொகுப்பு வீடுகள்
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை அருகே உள்ள பாச்சலூர் ஊராட்சிக்கு உட்பட்டது கடைசிக்காடு மலைக்கிராமம். இங்கு மலைவாழ் மக்கள் 47 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் 21 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
தற்போது அந்த வீடுகள் சேதம் அடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. மழைக்காலத்தில் மேற்கூரை வழியாக தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் மேற்கூரையின் மீது தார்ப்பாய் விரித்துள்ளனர். சிலர் தகரத்தை வீடுகளின் மீது வைத்துள்ளனர்.
பலத்த காற்று வீசும் போது தார்ப்பாய், தகரம் பறந்து செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது. சேதம் அடைந்த வீடுகளை மலைக்கிராம மக்களே தங்களது சொந்த பணத்தில் செலவு செய்து வருகின்றனர்.
இதேபோல் தொகுப்பு வீடு இல்லாத சிலர், அப்பகுதியில் தார்ப்பாய் மற்றும் தகரத்தால் ஆன மேற்கூரையால் குடிசைகளை அமைத்து குடியிருந்து வருகின்றனர். எனவே சேதம் அடைந்த தொகுப்பு வீடுகளை அரசு சீரமைக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதாரமற்ற குடிநீர்
இதேபோல் கடைசிக்காடு மலைக்கிராமத்தில் குடிநீர், சாக்கடை, தெரு விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. திறந்தவெளியில் கழிவு நீர் செல்கிறது.
மேலும் அந்த கிராமத்தில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் சேகரித்து வைக்கும் தொட்டி படுமோசமாக காட்சி அளிக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் வகையில் தண்ணீர் தொட்டி உள்ளது. மேலும் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி தொட்டியில் உள்ள தண்ணீர் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு மலைக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தங்களது குடிநீர் தேவைக்காக, அருகே உள்ள தனியார் தோட்டத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே மலைக்கிராமத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.