கனிமவளம் ஏற்றி சென்ற லாரி, 2 கார்கள் மீது மோதியதால் பரபரப்பு
கனிமவளம் ஏற்றி சென்ற லாரி, 2 கார்கள் மீது மோதியதால் பரபரப்பு
குழித்துறை:
குமரி மாவட்டத்தில் இருந்து மார்த்தாண்டம் வழியாக கனிம வளம் ஏற்றி செல்லும் லாரிகள் கேரளாவுக்கு அதிக பாரத்துடன் செல்கின்றன. இதனால் விபத்துகளும், போக்குவரத்து நெருக்கடியும் அடிக்கடி ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் கனிம வளத்தை ஏற்றியபடி லாரி சென்றது. அந்த லாரி மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக குழித்துறை ஆற்றுப்பாலத்தில் சென்ற போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் லாரி, 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் 2 கார்களும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக காயமின்றி கார்களில் வந்தவர்கள் தப்பினர்.
அதே சமயத்தில் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கனிமவளம் ஏற்றி சென்று விபத்தை ஏற்படுத்திய லாரியை கைப்பற்றி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவரிடம் விசாரணை நடந்தது.