திருச்சி விமான நிலையத்துக்குள் புகுந்த லாரியால் பரபரப்பு
சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்துக்குள் புகுந்த லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்துக்குள் புகுந்த லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையம்
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது திருச்சி விமான நிலையம். இந்த சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிக அளவில் சென்று வருகிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி திருச்சி விமான நிலைய ஓடுதளத்திற்கு அருகில் இந்த சாலை அமைந்துள்ளதால் விபத்துகள் நடைபெறுவதை தடுக்க விமான நிலைய ஆணையத்தின் சார்பில் பல முறை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன.
விமான நிலையத்துக்குள் புகுந்த லாரி
சாலையை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கீழ் தள சாலை அமைப்பதற்கான வழி வகைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. சாலையை ஒட்டிய பகுதியில் விமானங்கள் அதிக அளவில் மேலே ஏற்றப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் பாதுகாப்பினை அதிகரிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஓசூரில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். லாரி நேற்று அதிகாலை 3.50 மணி அளவில் திருச்சி விமான நிலையம் அருகே வந்தது.
காயம் இன்றி தப்பினார்
அப்போது, திடீரென்று லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலைய ஓடு தளம் அருகில் இருந்த சுற்றுச் சுவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் சுற்றுச்சுவர் உடைந்தது. பின்னர் லாரி விமான நிலையத்துக்குள் சென்று நின்றது. இந்த விபத்தில் டிரைவர் செந்தில்குமார் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினார்.
தகவல் அறிந்த விமானநிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, லாரியை மீட்டு அங்கு இருந்து அப்புறப்படுத்தினர். விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து விமான ஓடுபாதை சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஓடுபாதையில் விமானம் வரும் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டு இருந்தால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று இருக்கும். ஆனால் அந்த சமயங்களில் எந்த விமானமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.அதுமட்டுமின்றி விபத்து நடைபெற்ற இடத்தில் பகல் நேரங்களில் வாகனங்கள் அதிக அளவில் சென்று வரும். அதிகாலை நேரம் என்பதால் எந்தவித வாகன நடமாட்டமும் இல்லை. இதனால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது. எனவே இப்பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணியை விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.