ரேஷன் அரிசி கடத்திய லாரி விபத்தில் சிக்கியது
பரமக்குடியில் ரேஷன் அரிசி கடத்திய லாரி விபத்தில் சிக்கியது.
பரமக்குடி,
பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் அரசு பஸ்சும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. உடனே மினி லாரியின் டிரைவர் வாகனத்தை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்பு போலீசார் அந்த லாரியை சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூடை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அந்த ரேஷன் அரிசியானது பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தி பின்பு மூடையாக வைத்து வேறு மாநிலத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளனர். இதை அறிந்த போலீசார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் கீதா சம்பவ இடத்திற்கு வந்து ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.இது குறித்து பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.