சுற்றுலா சென்ற மதுரை மாணவர், அரியமான் கடலில் மூழ்கி சாவு


சுற்றுலா சென்ற மதுரை மாணவர்,  அரியமான் கடலில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே அரியமான் கடலில் குளித்தபோது மதுரையை சேர்ந்த மாணவர், கடலில் மூழ்கி இறந்தார். அவருடன் சென்ற மற்றொரு மாணவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் அருகே அரியமான் கடலில் குளித்தபோது மதுரையை சேர்ந்த மாணவர், கடலில் மூழ்கி இறந்தார். அவருடன் சென்ற மற்றொரு மாணவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடல் அலையில் சிக்கினர்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை சாத்தக்கோன் வலசை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரியமான் கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்வது வழக்கம். அதன்படி மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்சி படித்து வந்த மாணவர்கள் 6 பேர் அரியமான் கடற்கரைக்கு சுற்றுலா வந்தனர். இதில் மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் வட்சன் (வயது 23), மதுரை திருநகரை சேர்ந்த சிவக்குமார் மகன் விக்னேஷ் (22) ஆகிய இருவரும் நேற்று மாலை 5.45 மணியளவில் கடலில் சீற்றம் இருப்பது தெரியாமல் கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கடல் அலையில் 2 பேரும் சிக்கி மூழ்கினர்.

ஒருவர் சாவு

இதை பார்த்து கடற்கரையில் நின்று கொண்டிருந்த மற்ற மாணவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கடலோர போலீசார் விரைந்து வந்து, படகில் சென்று தேடினார்கள். அப்போது மாணவர் வட்சன் உடலை மீட்டனர். மற்றொரு மாணவரான விக்னேஷ் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தேடி வருகிறார்கள்.

சுற்றுலா வந்த இடத்தில் நண்பரை பறிக்கொடுத்து விட்டோமே என நண்பர்கள் விக்னேஷ்வர், பிரவீன்குமார், வைரமுருகன், பாண்டியன் ஆகியோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story