இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி கேப்டனாக மதுரையை சேர்ந்தவர் தேர்வு
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி கேப்டனாக மதுரையை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டார்
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மதுரையை சேர்ந்த சிவா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சச்சின் சிவா என அழைக்கப்படும் இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீரசோழன். தற்போது மதுரை தெப்பக்குளம், மருதுபாண்டியர் நகரில் வசித்து வருகிறார். சிறுவயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வந்தார். இந்தநிலையில், பள்ளி, கல்லூரியிலும் கிரிக்கெட் பயணத்தைத் தொடர்ந்த சச்சின் சிவா தமிழக அணியில் இடம்பிடித்தார்.அதன்பின்னர், தமிழக அணியில் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தார். பின்னர் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி, தற்போது இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 15 வருட கடின உழைப்பு கைகொடுத்துள்ளது. இந்திய அணியை வழிநடத்தபோவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.. வருகிற ஜனவரி 20,21,22-ந் தேதிகளில் இந்தியா-இலங்கைக்கான போட்டி தமிழகத்தில் நடைபெறவுள்ளது. தமிழக அரசும், மத்திய அரசும் இந்திய அளவிலும், மாநில அளவிலும் கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைத்து வரும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும், உதவித் தொகையும் வழங்கவேண்டும் என்றார்.
இந்தநிலையில், நேற்று சச்சின் சிவாவை, மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேரில் அழைத்து பாராட்டினர்.