ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது
கஞ்சா வழக்கில் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாடிக்கொம்பு போலீசார், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி தாடிக்கொம்பு இ.பி.காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேப்படும்படி நின்ற 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கன்னிவாடியை அடுத்த தெத்துப்பட்டியை சேர்ந்த வைரவன் (வயது 28), அவருடைய மனைவி நவீனா (22), திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் (20), சென்னையை சேர்ந்த சுந்தரபாண்டி (35) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 35 கிலோ கஞ்சா, வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே போலீசார் வருவதை பார்த்ததும் அவர்களுடன் இருந்த தெத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திக் பாலு (38) என்பவர் தப்பியோடி தலைமறைவானது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர். ஆனாலும் ஓராண்டாக அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்தார். இந்த வழக்கு விசாரணை மதுரை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள கார்த்திக் பாலுவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தனிப்படை போலீசார் கன்னிவாடி பகுதியில் பதுங்கியிருந்த கார்த்திக் பாலுவை நேற்று கைது செய்தனர்.