தாய்லாந்து நாட்டில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை திரும்பியவர் கைது
தாய்லாந்து நாட்டில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையம் வந்து இறங்கியவரை கைது செய்தனர்.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அப்துல் ரஹீம் (வயது 53) என்பவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர். அப்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து நாட்டுக்கு சென்று விட்டு அங்கேயே சட்ட விரோதமாக தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
போலி பாஸ்போர்ட்
இந்த நிலையில் அப்துல் ரஹீம் சொந்த நாடு திரும்புவதற்காக முயற்சி செய்தார். சட்டவிரோதமாக அங்கு தங்கியிருந்த காரணத்தால் பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதையடுத்து அப்துல் ரஹீம் அங்குள்ள ஏஜெண்டுகள் சிலரை அணுகி பணம் கொடுத்து போலி இந்திய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். அந்தப் போலி பாஸ்போர்ட் மூலம் அப்துல் ரஹீம் தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அப்துல் ரஹீமை கைது செய்து மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அப்துல் ரஹீமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.