நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கும்பல்


நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கும்பல்
x

வேடசந்தூரில் முகமூடி அணிந்த கும்பல் நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

முகமூடி கும்பல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடைவீதியில் திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி முன்பு நேற்று நள்ளிரவு 2 மணிக்கு முகமூடி அணிந்த 2 பேர் சுற்றி திரிந்தனர். பின்னர் அவர்கள் வங்கி எதிரே உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை வேறுபக்கம் திருப்பி வைத்தனர். இதையடுத்து கடையின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்தனர்.

அப்போது எதிரே உள்ள வங்கி காவலாளி உமாபதி தூங்காமல் இருந்ததை மர்ம நபர்கள் பாா்த்தனர். இதனால் உடைத்த பூட்டை வைத்து வங்கியின் முன்பக்க கதவை பூட்டினர். இதைத்தொடர்ந்து நகைக்கடையின் இரும்பு ஷட்டரை கம்பியால் நெம்பி திறக்க முயன்றனர்.

கொள்ளையடிக்க முயற்சி

இந்த சத்தம் கேட்ட உமாபதி திருடன், திருடன் என கூச்சலிட்டார். பின்னர் பூட்டை உடைத்து கொண்டு அவர் வெளியே வந்து கூச்சலிட்டார். இதையடுத்து கொள்ளையடிக்க முடியாததால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். முன்னதாக இதே நபர்கள் நாடார் தெருவில் உள்ள செல்போன் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.8 ஆயிரம், 2 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

மேலும் அதே கடைவீதியில் தியாகராஜன் என்பவரது நகைப்பட்டறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.14 ஆயிரத்தை எடுத்து சென்றனர். இதையடு்த்து அடுத்தடுத்து உள்ள ஜவுளிக்கடை, செல்போன் கடை உள்ளிட்ட 3 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் கொள்ளையடிக்க முயன்ற நகைக்கடை மற்றும் திருடுபோன கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்்கப்பட்டு கடைகளில் பதிவான ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் வேடசந்தூர் அருகே உள்ள சித்தமரம் நால்ரோடு கிராமத்தில் முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான இ-சேவை மையம், மற்றொரு மளிகை கடையில் திருட்டு நடந்துள்ளது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைவீதிகளில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும்படி யாராவது சென்றார்களா என்பது குறித்தும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

வேடசந்தூர் பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை மற்றும் திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story