மதுபாட்டில்களை திருடி ஆசைதீர குடித்த கொத்தனார்


மதுபாட்டில்களை திருடி ஆசைதீர குடித்த கொத்தனார்
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்களை திருடி ஆசை தீர குடித்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்,

டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்களை திருடி ஆசை தீர குடித்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

சுவரில் துளை போட்டு...

நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளிச்சந்தை சந்திப்பில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று காலையில் அந்த வழியாக நடை பயிற்சி சென்ற ஒருவர் டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளை போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் கடை ஊழியருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். உடனே ஊழியர் விரைந்து வந்து கடைைய திறந்து உள்ளே சென்று பார்த்தார். மேலும் கடையில் இருப்பு இருந்த மது பாட்டில்களை சரி பார்த்தார்.

மது பாட்டில்கள் திருட்டு

அப்போது சுவரையொட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் இருந்த 25 மது பாட்டிகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

பின்னர் இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுவரில் போடப்பட்டிருந்த துளையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து மது பாட்டில்களை திருடிய நபரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் காலை 8 மணியளவில் ஈத்தங்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.

போதையில் கிடந்த கொத்தனார்

அப்போது ஒரு வாலிபர் மது போதையில் கிடந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை எழுப்பி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். தொடர்ந்து அவரிடம் இருந்த பைைய சோதனையிட்ட போது அவற்றில் மது பாட்டில்கள் இருந்தன. இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் திங்கள்சந்தை அருகே உள்ள ஆரோக்கியபுரம் குழியூரை சேர்ந்த வில்சன் (வயது35) என்பதும், கொத்தனார் வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

வெள்ளிச்சந்தை டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் உளியால் துளை போட்டு மது பாட்டில்களை திருடியதும் அம்பலமானது. மேலும் திருடிய மதுவை ஆசைதீர மதுகுடித்ததால் ஈத்தங்காடு பஸ்நிறுத்தம் பகுதியில் நிதானமிழந்து கிடந்தார். அவரிடம் மதுபாட்டில்கள் இருந்ததால் அவர் போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.

25 மதுபாட்டில்கள் பறிமுதல்

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வில்சனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அவர் மதுபாட்டில்களை திருடியது ஏன்? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட வில்சன் மீது இரணியல் போலீஸ் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட 2 வழக்குகள் உள்ளன.

டாஸ்மாக் கடையில் துளை போட்டு மது பாட்டில்கள் திருடியதாக கொத்தனார் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story