சங்கு ஊதுபவர்களை அழைத்து வர சென்ற கட்டிட மேஸ்திரி விபத்தில் பலி


சங்கு ஊதுபவர்களை அழைத்து வர சென்ற கட்டிட மேஸ்திரி விபத்தில் பலி
x

தாயின் இறுதி சடங்குக்காக சங்கு ஊதுபவர்களை அழைத்து வர சென்ற கட்டிட மேஸ்திரி விபத்தில் பலியானாா்.

கடலூர்

விருத்தாசலம், மே.5-

விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் ஞானவேல்(வயது 46). கட்டிட மேஸ்திரி. இவரது தாய் சின்னபொண்ணு நேற்று முன்தினம் நள்ளிரவில் உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்கு நிகழ்வுக்காக சங்கு ஊதுபவர்களை அழைத்துவருவதற்காக ஞானவேல், அவரது உறவினர் பாபு என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கார்குடல் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் பூதாமூர் துணை மின்நிலையம் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டை மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஞானவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த பாபு, விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story