மோட்டார் சைக்கிள் விபத்தில் மருத்துவக்கல்லூரி ஊழியர் பலி
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மருத்துவக்கல்லூரி ஊழியர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மருத்துவக்கல்லூரி ஊழியர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மோட்டார் சைக்கிள் விபத்து
குலசேகரம் அருகே வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் ராஜ் (வயது 37), ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் உணவு சாப்பிடுவதற்காக தன் நண்பரான ஆசாரிபள்ளத்தை சேர்ந்த யாகோப்பு ராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை யாகோப்பு ராஜ் ஓட்டினார்.
டெரிக் சந்திப்பு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாமுவேல் ராஜ், யாகோப்பு ராஜ் ஆகிய 2 பேரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர்.
ஊழியர் சாவு
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதில் சாமுவேல் ராஜ் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்து செல்லப்பட்டது.
படுகாயம் அடைந்த யாகோப்பு ராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் பற்றிய விவரம் தெரியவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் மருத்துவக்கல்லூரி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.