சத்தியமங்கலத்தில் பரபரப்பு போக்குவரத்தை சரிசெய்த மனநலம் பாதிக்கப்பட்டவர்
சத்தியமங்கலத்தில் பரபரப்பு போக்குவரத்தை சரிசெய்த மனநலம் பாதிக்கப்பட்டவர்
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வாரச்சந்தை அருகே நான்கு ரோடு பிரிவில் எப்போதும் வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும். அந்த பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அதனால் காலையும், மாலையும் அதிக அளவில் மாணவர்கள் ரோட்டை கடந்து செல்வார்கள். நேற்று அங்கு வாரச்சந்தை நாள் என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் போக்குவரத்து இருந்தது.
இந்தநிலையில் கையில் தடியுடன் சிவப்பு, கருப்பு நிறத்தில் 2 சட்டைகளை அணிந்த ஒருவர் திடீரென நடுரோட்டில் வந்து நின்றார். பின்னர் 4 ரோடுகளிலும் ஒவ்வொன்றாக பார்த்து, நீ வா, நீ போ என்று போக்குவரத்தை சீரமைக்க தொடங்கினார். யாரோ சமூக ஆர்வலர்தான் போக்குவரத்தை சீரமைக்கிறார் என்று வாகன ஓட்டிகள் நினைத்தனர். அதன்பின்னர்தான் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்தது. இதுகுறித்து உடனே போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் மனநலம் பாதிக்கப்பட்டவரை ரோட்டோரமாக அழைத்து சென்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர் போக்குவரத்தை முறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.