கிராமத்துக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க அகழி அமைக்கப்படும்


கிராமத்துக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க அகழி அமைக்கப்படும்
x

பேரணாம்பட்டு அருகே சேரங்கல் பகுதியில் சேராங்கல்காட்டு யானைகள் சேதப்படுத்திய வயல்களை பார்வையிட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கிராமங்களுக்குள் வனவிலங்குகளை தடுக்க அகழி அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

வேலூர்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே சேரங்கல் பகுதியில் சேராங்கல்காட்டு யானைகள் சேதப்படுத்திய வயல்களை பார்வையிட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கிராமங்களுக்குள் வனவிலங்குகளை தடுக்க அகழி அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

வனவிலங்குளால் பாதிப்பு

பேரணாம்பட்டு வனசரக பகுதியில் வன பகுதியையொட்டி அமைந்துள்ள சேராங்கல் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் யானை உள்ளிட்ட வன விலங்குகள பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து வலியுறுத்தி விவசாயிகள்பேசினர்.

இதனையடுத்து சேராங்கல் கிராம வனப் பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது கலெக்டரிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ''சேராங்கல் வனப்பகுதியையொட்டி ஏற்கனவே போடப்பட்ட சோலார் மின்வேலிகள் வீணாக போனது.

மண் சரிவான பகுதிகளில் அமைக்கப்பட்ட அகழிகள் பயனற்று சரிந்து மூடிவிட்டன. எனவே மண் சரிவு ஏற்படும் பகுதியில் கேரள மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே இரும்பு தண்டவாள தூண்கள்போல் நிறுத்தி அகழியை சிமெண்ட்டால் அமைத்து யானைகள் நுழையாதவாறு ஏற்படுத்தி தரவேண்டும்'' என வலியுறுத்தினர்.

இதற்கு கலெக்டர் பதிலளித்து பேசி கொண்டிருந்த போது திடீரென விவசாயிகள் குறுக்கிட்டு வனத்துறையினரால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட மோகன் பாபு, சபரீஷ் குறித்து பேசினர்.

அவர்களிடம் கலெக்டர், ''ஏற்கனவே இதைப் பற்றி சொல்லிவிட்டேன். மறுபடியும் ஏன் அதைப் பற்றி பேசறீங்க, ரேஞ்சர் அவருடைய பணியை தான் செய்தார்'' என்றார்.

யானைகள் தொல்லை

இதனையடுத்து கலெக்டர் கூறுகையில், ''பேரணாம்பட்டு, குடியாத்தம் வனச்சரக பகுதிகளில் கடந்த 4, 5 ஆண்டுகளாக யானைகளால் தொல்லை இருக்கிறது.

தற்காலிகமாக இந்த பகுதியில் அகழி ஏற்படுத்தி வன விலங்குகள் நுழைவதை முதலில் தடுத்து நிறுத்தி வைக்கிறோம். நீங்கள் சொல்வதையும், வல்லுனர்கள் ஆலோசனையும் கேட்டு ஆய்வு செய்து வனவிலங்குகள் வராதவாறு நடவடிக்கை எடுக்கிறோம்'' என்றார்.

கலெக்டர், மற்றும் வனத்துறை அதிகாரிகள் சேராங்கல் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அப்போது வனப்பகுதியிலிருந்து திடீரென டமார் என்று சத்தம் கேட்டது.

இதனையறிந்த அதிகாரிகள் என்ன சத்தம் என வன துறையினரிடம் கேட்ட போது அதற்கு வனத்துறையினர் குரங்குகளை விரட்டுவதற்கு வெடி வைத்து விரட்டுகின்றனர் என சொல்லி சமாளித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அதிகாரி கலாநிதி, சப்-கலெக்டர் வெங்கட்ராமன், உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன், அமலு விஜயன் எம்.எல்.ஏ., தாசில்தார் நெடுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், வனசரகர் சதீஷ்குமார், ஒன்றிய திமுக செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட், ஒன்றிய கவுன்சிலர் டில்லி ராஜா உள்பட வனத்துறையினர், விவசாயிகள் பங்கேற்றனர்.


Next Story