கடலூரில் இதையும் விட்டு வைக்கவில்லை: நள்ளிரவில் பியூஸ் கேரியரை திருடும் கும்பல் தூக்கமின்றி பொதுமக்கள் தவிப்பு


கடலூரில் இதையும் விட்டு வைக்கவில்லை:    நள்ளிரவில் பியூஸ் கேரியரை திருடும் கும்பல்    தூக்கமின்றி பொதுமக்கள் தவிப்பு
x

கடலூரில் நள்ளிரவில் பியூஸ் கேரியரை ஒரு கும்பல் திருடி வருகிறது. இதனால் இரவில் தூக்கமின்றி பொதுமக்கள் தவிக்கிறார்கள்.

கடலூர்

பியூஸ் கேரியர் திருட்டு

கடலூர் மாநகராட்சி பகுதியில் மின்சார வாரியம் சார்பில் புதை வட மின் கேபிள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலான வார்டுகளிலும் பணிகள் முடிவடைந்து புதை வட கேபிள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மின்மாற்றிகள் தரை பகுதியில் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பியூஸ் கேரியரை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடிச்செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. கடலூர் புதுப்பாளையம் பகுதியில் அடிக்கடி இந்த திருட்டு நடந்து வந்தது. தற்போது அதில் சில இடங்களில் பொதுமக்களே பூட்டு போட்டு வைத்துள்ளனர். அதன்பிறகு அந்த பகுதியில் திருட்டு நடைபெறவில்லை.

பொதுமக்கள் தவிப்பு

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வன்னியர்பாளையம் வேல்நகர் பகுதியில் பியூஸ் கேரியர் திருட்டு அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக நள்ளிரவு 1 மணிக்கு மேல் மின்மாற்றியில் உள்ள பியூஸ் கேரியரை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் தூக்கமின்றி விடிய, விடிய தவித்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரமப்பட்டனர். பின்னர் இது பற்றி மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் தற்காலிகமாக ஒயரை மாட்டி மின் இணைப்பு கொடுத்தனர்.

விலை அதிகம்

மற்ற பியூர் கேரியரை விட புதைவட கேபிள் பெட்டியில் உள்ள பியூர் கேரியர் விலை அதிகம். இதனால் புதைவட கேபிள் பெட்டியை குறிவைத்து ஒரு கும்பல் பியூஸ் கேரியரை திருடி வருகிறது.

ஆகவே கடலூர் புதுநகர் போலீசார் இரவு நேரங்களில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு, பியூஸ் கேரியர் திருடும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story