விதவை பெண்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.1500 வழங்க வேண்டும்
விதவை பெண்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.1,500 வழங்க வேண்டும் என சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொறையாறு:
விதவை பெண்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.1,500 வழங்க வேண்டும் என சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு
தரங்கம்பாடியில் விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் கைம்பெண்கள் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு சங்க தலைவர் கஸ்தூரி தலைமை தாங்கினார். விதவை பெண்கள் நல்வாழ்வு சங்கத்தை சேர்ந்த ராதா வரவேற்றார்.
அனைத்து இந்திய ஜனநாயக சங்க மாநில துணைத்தலைவர் கலைச்செல்வி, பூம்புகார் கல்லூரி உதவிப்பேராசிரியர் சாந்தகுமாரி, வக்கீல் தியாகராஜன், விதவை பெண்கள் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெசி உள்பட பலர் பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நலத்துறை உருவாக்க வேண்டும்
தமிழக அரசு கைம்பெண்களுக்கு நலவாரியம் அமைக்கும் என்று சட்ட பேரவையில் 2021-ம் ஆண்டு அறிவித்ததற்கு பாராட்டு தெரிவிப்பது. நலவாரியத்தை விட மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக நலத்துறை உருவாக்கபட்டிருப்பது போல தமிழகத்தில் 40 லட்சத்திற்கு மேல் உள்ள விதவை பெண்களுக்கு நலத்துறையை ஏற்படுத்த வேண்டும்.விதவை பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.1500 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி உடனடியாக வழங்க வேண்டும்.
இட ஒதுக்கீடு
வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனையும், கோவில் இடங்கள் மற்றும் புறம்போக்கு இடங்களில் வாழும் விதவை பெண்களுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறையில் விதவை பெண்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
விதவை பெண்களுக்கு என வன்கொடுமை தடுப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படடன. இதில் விதவை பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தை சேர்ந்த திலகவதி நன்றி கூறினார்.