சேலம் சின்னதிருப்பதியில் பரிதாபம்: 14 பிள்ளைகளின் தாய் தற்கொலை


சேலம் சின்னதிருப்பதியில் பரிதாபம்: 14 பிள்ளைகளின் தாய் தற்கொலை
x

சேலம் சின்னதிருப்பதியில் பேரனுடன் ஏற்பட்ட தகராறில் 14 பிள்ளைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

கன்னங்குறிச்சி:

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிணற்றில் பெண் உடல்

சேலம் சின்னதிருப்பதி பெருமாள் கோவில் அருகே உள்ள விவசாய கிணற்றில் பெண் ஒருவரது உடல் மிதந்தது. தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கிணற்றில் பிணமாக மிதந்த பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜான்சன்பேட்டையை சேர்ந்த வேலாயுதம் என்பவருடைய மனைவி சீரங்கம்மாள் (வயது 80) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஜெயில் வார்டனின் மனைவி

போலீசார் நடத்திய மேல் விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

வேலாயுதம்- சீரங்கம்மாள் தம்பதிக்கு 4 மகன்களும், 10 மகள்களும் உள்ளனர். வேலாயுதம் சேலம் மத்திய ஜெயிலில் வார்டனாக பணிபுரிந்து வந்தார். 1984-ம் ஆண்டு பணியின் போது வேலாயுதம் இறந்து விட்டார். அதன்பிறகு அவருக்கான மாதாந்திர பென்ஷன் தொகை ரூ.11 ஆயிரத்தை அவருடைய மனைவி சீரங்கம்மாள் பெற்று வந்தார். மகன் வழி பேரன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார்.

இதற்கிடையே பேரனுடன் ஏற்பட்ட தகராறில் சீரங்கம்மாள் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் சுற்றி திரிந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகு சீரங்கம்மாள் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருந்தாலும், பேரனுடன் தகராறு ஏற்பட காரணம் என்ன? என்பது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர்.

14 பிள்ளைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story