திருவள்ளூர் அருகே குழந்தை கள்ளக்காதலில் பிறந்ததால் 10 அடி ஆழ குழிக்குள் போட்டு கொல்ல முயன்ற தாய் கைது
கள்ளக்காதலில் பிறந்ததால் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை 10 அடி ஆழ குழிக்குள் போட்டு மேலே மண் கற்களை வைத்து கொல்ல முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த கொசவம்பாளையம் சுடுகாடு அருகே உள்ள காலி இடத்தில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் பள்ளத்தில் போடப்பட்டு இருந்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வந்து பார்த்தபோது பச்சிளம் குழந்தை உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குழந்தையின் முகத்தில் சிறிய காயங்கள் இருந்தன. இதற்கிடையே காலை 10 மணியளவில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து போனது.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த இளம்பெண் ஒருவர் குழந்தை பிறந்ததும் அதனை வீசி சென்று இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் இறந்த நிலையில் கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் அவர் குழந்தையை தரை பள்ளத்தில் வீசி சென்று உள்ளார். இதில் குழிக்குள் விழுந்த குழந்தை காயம் அடைந்து இறந்து உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.