ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி முனைப்பு இயக்கம்
திருமருகலில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி முனைப்பு இயக்கம்
திட்டச்சேரி:
நாகை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பரிமேலழகன் தலைமையில், தோட்டக்கலை உதவி இயக்குனர் கண்ணன் முன்னிலையில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி முனைப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்ல பாண்டியன் விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி விதைகள், குழித்தட்டு காய்கறி நாற்றுகள் வழங்கி காய்கறி சாகுபடி பரப்பளவை அதிகரித்து கொள்ள கேட்டுக்கொண்டார். மேலும் கொடி வகை காய்கறிகளுக்கு ஆடிப்பட்டமும், தைப்பட்டமும் ஏற்றது. அதிலும் ஆடிப்பட்டத்தில் பாகல், பீர்க்கன், புடலை இவை மூன்றையும் சாகுபடி செய்யும்போது பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் குறைவாக இருக்கும். செடிகளின் வளர்ச்சியும் நன்றாக இருப்பதோடு, மகசூலும் சிறப்பாக இருக்கும். எனவே இந்த மூன்று பயிர்களுக்கும் ஆயுள் காலம் 6 மாதங்கள் என்பதால் அனைத்து விவசாயிகளும் பயிரிட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். இதில் திருமருகல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.