ஓடும் அரசு பஸ்சில் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்தது; முதியவர் காயம்


நாகர்கோவிலில் ஓடும் அரசு பஸ்சில் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்து முதியவர் காயம் அடைந்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஓடும் அரசு பஸ்சில் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்து முதியவர் காயம் அடைந்தார்.

கண்ணாடி உடைந்தது

குமரி மாவட்டத்தில் 840 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 450 பஸ்கள் மாவட்டத்துக்குள்ளும், மீதமுள்ள பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கும் இயக்கப்படுகிறது. இதில் மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பஸ் சென்று கொண்டு இருக்கும் போதே படிக்கட்டு கழன்று விழுவது, மேற்கூரை காற்றில் பறப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளன. இந்த நிலையில் ஓடும் பஸ்சில் கண்ணாடி உடைந்து விழுந்து பயணி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

அதாவது மணக்குடியில் இருந்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்துக்கு நேற்று காலை ஒரு அரசு பஸ் (தடம் எண் 37) புறப்பட்டது. காலை நேரம் என்பதால் அந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ் நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பஸ்சின் ஜன்னல் கண்ணாடி ஒன்று திடீரென உடைந்தது.

முதியவர் காயம்

இந்த கண்ணாடி துண்டுகள் இருக்கையில் இருந்த மணக்குடியைச் சேர்ந்த மரிய ஆன்சன் (வயது 64) என்பவர் மீது விழுந்து சிதறியது.

இந்த சம்பவத்தில் மரிய ஆன்சன் தலையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் மரிய ஆன்சனை சக பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாற்று பஸ் ஏற்பாடு

இதற்கிடையே பஸ் கண்ணாடி உடைந்து விழுந்து பயணி காயம் அடைந்த சம்பவம் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுக்கும், கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் சம்பந்தப்பட்ட அரசு பஸ்சை கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். முன்னதாக பஸ்சில் இருந்த பயணிகளுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.

எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து குறித்து மரிய ஆன்சன் கூறுகையில், "நான் பொருட்கள் வாங்க நாகர்கோவில் வருவதற்காக பஸ்சில் ஏறினேன். பஸ்சில் நடுப்பகுதியில் உள்ள இருக்கையில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தேன். பஸ்சானது பள்ளத்தில் இறங்கி ஏறியபோது திடீரென கண்ணாடி உடைந்து என் தலையில் விழுந்தது. பஸ்சின் நிலை மோசமாக இருந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. எனவே பழுதான அரசு பஸ்களை மாற்ற வேண்டும்" என்றார்.

ஓடும் பஸ்சில் கண்ணாடி உடைந்து விழுந்து முதியவர் காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story