நிதி நிறுவனம் தொடங்கி பல லட்சம் மோசடி போலீஸ் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

நிதி நிறுவனம் தொடங்கி பல லட்சம் மோசடி போலீஸ் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x

வாணியம்பாடி அருகே நிதிநிறுவனம் தொடங்கி கடன் கொடுப்பதாகக் கூறி பெண்களிடம் பல லட்சம் வசூல் செய்து மோசடி செய்ததால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே நிதிநிறுவனம் தொடங்கி கடன் கொடுப்பதாகக் கூறி பெண்களிடம் பல லட்சம் வசூல் செய்து மோசடி செய்ததால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நிதி நிறுவனம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் செட்டியப்பனூர் ரேஷன் கடை தெருவில் சுந்தரம் என்பவருக்கு சொந்தமான வீட்டை மாதம் ரூ.25 ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளார். அதில் அக்சயம் பைனான்ஸ் என்ற பெயரில் கடந்த மாதம் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.

இந்த நிதி நிறுவனத்தில் தலா ரூ.2,652 கட்டினால் ரூ.40 ஆயிரம் கடன் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய பலர் பணம்கட்டி உள்ளனர். மகளிர் குழுக்களை சேர்ந்த 1,300 பெண்களிடம் தலா ரூ.2,652 வசூலித்து அவர்களுக்கு இந்த மாதம் இறுதியில் தலா ரூ.40 ஆயிரம் கடன் கொடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

பணத்துடன் தலைமறைவு

இந்த நிலையில் விக்னேஷ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டு உரிமையாளருக்கு ஒரு மாதம் வாடகை கொடுத்துவிட்டு, மகளிர் குழுக்களிடம் வசூல் செய்த பல லட்சம் ரூபாயுடன் இரவோடு இரவாக தலைமறைவாகி விட்டார்.

இதனை அறிந்த பாதிக்கப்பட்ட பெண்கள் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த ராமகிருஷ்ணன் என்பவரை பிடித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பணத்தை ஏமாற்றி விட்டு சென்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story