குடியாத்தம் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்


குடியாத்தம் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்
x

குடியாத்தம் அருகே இரவு வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

மர்ம பொருள் விழுந்தது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் கிராமம் மோர்தானா கால்வாய் அருகே நேற்று இரவு சுமார் ஏழு மணி அளவில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று கீழே விழுந்துள்ளது. இதனை கண்டதும் அப்பகுதி மக்கள் உடனடியாக வந்து பார்த்தனர். அப்போது அதில் பாராசூட் போன்ற ஒரு பொருளும், அதன் அருகிலேயே சிக்னல் அடித்துக் கொண்டு ஒரு சிறிய அளவிலான பெட்டியும் இருந்துள்ளது.

இதனை கண்டதும் கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அருகில் செல்லவும் அச்சப்பட்டனர். உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர்கள் சேகர், சரவணன் உள்ளிட்டோர் அங்குள்ள பொதுமக்களிடம் விசாரித்தனர்.

வானிலை ஆய்வு மையம்

மேலும் வானத்தில் இருந்து கீழே விழுந்த பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அதிலிருந்து சிக்னல்கள் வந்தபடி இருந்த சிறிய அளவிலான பாக்சில் மத்திய அரசின் தேசிய வானிலை ஆய்வு மையம், சென்னை மீனம்பாக்கம் என முகவரி இருந்தது. மேலும் அதில் போன் நம்பரும் இருந்தது.

உடனடியாக போலீசார் அதிலிருந்த நம்பரை தொடர்பு கொண்ட போது அது வானிலை ஆராய்ச்சி மையத்தின் வானிலை ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. அந்த பெட்டி பல்வேறு பகுதியில் உள்ள தட்பவெப்ப நிலை, வானிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய உதவிகரமாக இருப்பதாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து அங்கு கீழே விழுந்து கிடந்த பொருட்களை போலீசார் பத்திரமாக சேகரித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனிடையே மர்ம பொருள் வானில் இருந்து விழுந்த சம்பவம் அறிந்ததும் அக்கம் பக்கத்து கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அந்த பொருளை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.


Next Story