அதிவீரரமனார் ஆற்றில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும்


அதிவீரரமனார் ஆற்றில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும்
x

அதிவீரரமனார் ஆற்றில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும்

திருவாரூர்

கோட்டூர் அருகே அதிவீரரமனார் ஆற்றில் புதிய தடுப்பணை கட்டி, தண்ணீர் இன்றி கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பணை உடைந்தது

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடப்பு சம்பா சாகுபடி பணிகள் நேரடி விதைப்பு மூலமாகவும், நடவு மூலமாகவும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கோட்டூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு பாமணி ஆறு, கோரையாறு, அரிச்சந்திராநதி, வெண்ணாறு ஆகிய ஆறுகளிலிருந்து பிரிந்து சிறிய ஆறுகள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் பெறப்படுகிறது.

மேலும் கூத்தாநல்லூரில் இருந்து பிரிந்து செல்லும் அதிவீரரமனார் ஆற்றில் காக்கையடி என்ற இடத்தில் தடுப்பணை மூலம் பாசனத்திற்கு தண்ணீர் பெற்று பள்ளிவர்த்தி, குருவாடி, பூதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 1,200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி மேற்கொண்டனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தடுப்பணை முற்றிலும் சேதமடைந்து உடைந்து கிடக்கிறது. ஆனால் இதுவரை உடைந்து கிடக்கும் தடுப்பணை சீரமைக்கப்படவில்லை.

தண்ணீர் செல்ல முடியாத நிலை

இதனால் கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புதிய தடுப்பணை கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் மூலம் பாசன பெறும் பள்ளிவர்த்தி, பூதமங்கலம், பெரியகுருவாடி உள்ளிட்ட பல கிராமங்களில் ஒரு போக சாகுபடி பணியை தொடரலாம் என விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்திற்கு நேரடி நெல் விதைப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் அதிவீரரமனார் ஆற்றில் உடைந்து கிடக்கும் தடுப்பணை சீரமைக்கப்படாததால் தண்ணீர் பாசனத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற வேண்டும்

இதனால் நேரடி விதைப்பு மூலம் சாகுபடி பணியை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வராததால், சம்பா பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிவீரரமனார் ஆற்றில் பம்புசெட் மற்றும் இறைகூடை மூலம் ஆற்றில் இருந்து விவசாயிகள் தண்ணீரை இறைத்து கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு உடைந்து கிடக்கும் அதிவீரரமனார் ஆற்றில் புதிய தடுப்பணை கட்டி, தண்ணீர் இன்றி கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடு்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story