தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் புதிய கட்டிடம் கட்டி தரப்படும்
தஞ்சை மாவட்ட நூலகத்தில் புதிய கட்டிடம் கட்டி தரப்படும் என எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கூறினார்.
தஞ்சை மாவட்ட நூலகத்தில் புதிய கட்டிடம் கட்டி தரப்படும் என எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கூறினார்.
உலக புத்தக நாள் நிறைவு விழா
தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக நாள் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பேராசிரியர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் முத்து, வாசகர் வட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மேடையில் பேசுவதும், எழுதுவதும் தமிழ்நாட்டின் மிகப் பெரிய வரம். தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான எழுத்தாளர்கள் இருந்தனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களை வரிசைப்படுத்தி எழுதினால், மிகப் பெரிய புத்தகம் வெளி வரும்.
புதிய கட்டிடம்
இந்த நூலகத்தில் போட்டித் தேர்வுக்காக 300-க்கும் அதிகமானோர் படிக்கின்றனர். இவர்கள் படிப்பதற்கு வசதியாக முதல் தளத்தில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, அருகில் சிதிலமடைந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இங்கு போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களை உற்சாகப்படுத்துவது எனது கடமை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அவர்களுக்கு தேவையான உதவிகள் ஓராண்டுக்குள் செய்து கொடுக்கப்படும். எந்த துறையாக இருந்தாலும் அதில் உற்சாகத்துடன் இல்லையென்றால் வெற்றி பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கவிஞர்கள் வல்லம் தாஜூபால், டொமினிக் சேகர், ராகவ் மகேஷ் ஆகியோர் பேசினர். முன்னதாக சுரேஷ் வரவேற்றார். முடிவில் வாசகர் வட்ட கூடுதல் துணைத் தலைவர் முத்தையா நன்றி கூறினார்.