ஓகைப்பேரையூரில் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையம் புதிதாக கட்டப்பட்டது
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ஓகைப்பேரையூரில் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர்:
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ஓகைப்பேரையூரில் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே ஓகைப்பேரையூர் பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் கடைவீதிகளில் கொட்டப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அள்ளிச் சென்று, மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வருகின்றனர்.
இதற்கான ஓகைப்பேரையூரில் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையம் கட்டப்பட்டது. அங்கு வைத்து குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
கட்டிடம் சேதமடைந்தது
இந்த நிலையில் அந்த கட்டிடம் சேதமடைந்து சுவர்கள் இடிந்து விழுந்தன. ேமலும் அந்த பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது. இதனால், குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற முடியாமல் போனது.
இந்த குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையத்தில் உள்ள சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
புதிதாக கட்டப்பட்டது
இதுகுறித்து செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் வெளியானது. அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஓகைப்பேரையூரில் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலைய பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி" நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.