கணவரை உதறி விட்டு காதலனை நம்பி சென்ற புதுப்பெண்
நாகர்கோவில்:
கணவரை உதறி விட்டு இன்ஸ்டாகிராம் காதலனை நம்பிச் சென்ற புதுப்பெண்ணை சென்னையில் உள்ள ஒரு விடுதியில் போலீசார் மீட்டனர்.
காதல் திருமணம்
மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் பகுதியை சோ்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த இளம்பெண்ணும், குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவருக்கும் கடந்த மே மாதம் 25-ந் தேதி திருமணம் நடந்தது.
மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் இளம்பெண் வேலை பார்த்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் அந்த வேலையை அவர் விடவில்லை. அதே சமயத்தில் சமூக வலைதளத்தில் நேரத்தை செலவிடுதில் அவர் ஆர்வம் காட்டினார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பாட்டுகள் பாடியும், பாட்டிற்கு ஏற்ப நடனம் ஆடியும் ரீல்ஸ்களை பதிவிட்டார். இதனால் அவரது இன்ஸ்டாகிராமை ஏராளமான ஆண்கள் பின்தொடர்ந்தனர். அதில் தஞ்சாவூரை சேர்ந்த வாலிபரும் ஒருவர்.
இளம்பெண் மாயம்
இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி பெற்றோர் வீட்டுக்கு சென்று தங்கினார். பிறகு 5-ந் தேதி மனைவியை பார்க்க கணவர் சென்றுள்ளார். மாமூட்டுகடை பகுதிக்கு சென்று வருவதாக கூறிய அவர் அதன்பிறகு வீட்டுக்கு வரவில்லை என பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர்.
பின்னர் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை பற்றிய தகவல் இல்லை. இதனால் கணவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். சில நாட்கள் கழித்து இளம்பெண்ணின் செல்போன் சிக்னல் சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியை காண்பித்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று விடுதியில் தங்கியிருந்த இளம்பெண்ணை மீட்டனர். போலீசாரை கண்டதும் அவர் தன்னை ஊருக்கு அழைத்து செல்ல வேண்டாம் என கெஞ்சி கதறினார்.
காதலனை நம்பி கணவரை உதறினார்
ஆனால் போலீசார் அவரது கதறலை பொருட்படுத்தாமல் விசாரணை நடத்தினர். இதில் அவரை பற்றி அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, இன்ஸ்டாகிராம் மூலம் அந்த இளம்பெண் பலருடன் பழகியுள்ளார். அதன் மூலம் பழகிய வாலிபரை தான் அவர் காதலித்து திருமணம் செய்தார். அதே சமயத்தில் தஞ்சாவூரை சேர்ந்த 28 வயது வாலிபரையும் அவர் காதலித்துள்ளார். திருமணத்திற்கு பின்பும் அவர் தன்னுடைய காதலை கைவிடவில்லை.
இளம்பெண் பதிவிடும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களுக்கு அந்த தஞ்சாவூர் வாலிபர் லைக் மற்றும் கமெண்ட் தொடர்ந்து போட்டு வந்துள்ளார். இந்த லைக்கால் அவரது லைப்பே பறிபோகப்போவது என்பது அந்த இளம்பெண்ணுக்கு அப்போது தெரியவில்லை. இருவரும் செல்போனில் பேசி பழகி தங்களுடைய அன்பை பரிமாறிக் கொண்டனர்.
தற்போது வாலிபர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருமணத்துக்கு பிறகு வாலிபரின் பேச்சில் மயங்கிய இளம்பெண் கணவரையே உதறும் நிலைக்கு சென்றார்.
போலீசார் மீட்டனர்
அதன்படி சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்ற இளம்பெண், காதலனை காண சென்னைக்கு சென்றார். அங்கு காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்துள்ளார். வாழ்க்கையே இதுதான் என நினைத்து ஒருவாரமாக உல்லாச வானில் சிறகடித்து பறந்தார்.
இதற்கிடையே இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலனிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவரோ மழுப்பலாக பதில் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் இளம்பெண்ணை போலீசார் தேடுவதை அறிந்த காதலன் உஷாராகி, அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சேர்த்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். அதன் பிறகு அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் நிலைக்கு சென்றது. தான் நம்பி வந்த காதலன் தன்னை ஏமாற்றி விட்டான் என்பதை அதன் பிறகு உணர்ந்த இளம்பெண் அங்கு நிர்கதியாக பரிதவித்தபடி இருந்துள்ளார்.
பரபரப்பு
இந்த நிலையில் தான் தனிப்படை போலீசார் இளம்பெண்ணை மீட்டு குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அந்த இளம்பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக தெரிவித்தார். பின்னர் அவரை போலீசார் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இன்ஸ்டாகிராமில் வாலிபர் போட்ட லைக் இளம்பெண்ணின் லைப்பையே கேள்விக்குறியாக்கிய சம்பவம் குமரியில் பரபரப்பாக பேசப்பட்டது.