அமிர்தி பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட புதிய குள்ள நரி
கோவையில் இருந்து அமிர்தி பூங்காவிற்கு புதிய குள்ள நரி கொண்டுவரப்பட்டது.
வேலூரை அடுத்த அமிர்தி வன உயிரியல் பூங்காவில் பாம்பு, மான்கள், முதலை, ஆமை, மயில் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் வனவிலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய விலங்குகள் வழங்கும்படி வனத்துறை அதிகாரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கோவையில் ஒரு குள்ளநரி 5 குட்டிகளை ஈன்றது. இதில் 4 குட்டிகள் இறந்து விட்ட நிலையில் ஒரு குட்டியை மட்டும் பராமரித்து வந்தனர்.
இந்த குள்ளநரிகுட்டியை வேலூர் அமிர்தி பூங்கா நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவையில் இருந்து அமிர்திக்கு நேற்று குள்ள நரி கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. அதற்கு 'தோனி' என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் முதலை, பாம்பு, பறவைகள் அடுத்தடுத்து கொண்டு வரப்பட உள்ளது எனவும், அவற்றை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.