பள்ளிகொண்டாவை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும்
பள்ளிகொண்டாவை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட வன அலுவலர் கலாநிதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது குறைகள், புகார்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
அப்போது அவர்கள் பேசியதாவது:-
புதிய தாலுகா
ஒரு மாடு வைத்திருப்பவர்களுக்கே அதிகம் கடன் வழங்கப்படுகிறது. ஒரு மாட்டின் விவரத்தினை வைத்து பலர் கடன்பெற்று வருகின்றனர். இதன் மூலம் உண்மையான கால்நடை வளர்ப்போர் பயன்பெற முடியவில்லை. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தத்தில் உள்ள 5 கிராமங்கள், கே.வி.குப்பத்தில் உள்ள 10 கிராமங்கள் மற்றும் அணைக்கட்டில் உள்ள 12 கிராமங்களை பிரித்து பள்ளிகொண்டாவை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும். அங்கு தான் பத்திரப்பதிவு அலுவலகம், மருத்துவமனை, போலீஸ் நிலையம் உள்ளது. புதிய தாலுகாவாக மாற்றினால் மக்கள் பயன்பெறுவார்கள்.
தீவன பயிர்கள்
சொட்டுநீர் பாசனத்திற்கான உதிரிபாகங்கள் வேலூரில் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும். பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் கசகசா வேலூர் மாவட்டத்தில் பயிரிட அனுமதி உள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் அனுமதி பெற்றுத்தர வேண்டும்.
கோடை காலத்தில் உணவு தேடி காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்கு வருகிறது. அவை வருவதை தடுக்க யானைகள் வரும் பாதையில் தீவன பயிர்கள் நட்டு வைக்க வேண்டும். வனத்துறையினர் விவசாயிகளிடம் கரும்பை கொள்முதல் செய்து யானைகள் வரும் பாதையில் போட வேண்டும். அவ்வாறு செய்தால் யானைகள் விளை நிலங்களுக்குள் வருவதை தடுக்க முடியும்.
தொழில்நுட்ப முறை
கோடைகாலத்தை முன்னிட்டு மின்வாரியம் சார்பில் மின்மாற்றிகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும். தென்பெண்ணை- பாலாறு நதி திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.வேலூரில் இருந்து அலமேலுமங்காபுரம் செல்லும் அரசு பஸ்கள் சர்வீஸ் சாலையில் செல்ல வழிவகை செய்ய வேண்டும். காட்பாடி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும்.
ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த கோதுமையின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தரமற்ற கோதுமைகளும் வழங்கப்படுகிறது. அணைக்கட்டில் கோர்ட்டு, தீயணைப்பு நிலையங்கள் கொண்டு வரவேண்டும். முருங்கைகீரையை பொடியாக மாற்றி வெளிநாடுகளில் விற்பனை செய்யும் தொழில்நுட்ப முறையை அதிகாரிகள் கற்றுக்கொண்டு வேலூர் விவசாயிகளுக்கு கற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உடனடி நடவடிக்கை
இதற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், ''ஆக்கிரமிப்புகள் தொடர்பாக நேரில் ஆய்வு செய்யப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை தீர்க்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் துறை திட்டங்கள், மானியம் வழங்குதல் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.
அதிகாரிகள் கூறுகையில், மின்வேலிகள் மூலம் காட்டுயானைகள் அதிகம் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே மின்வேலிகள் விவசாயிகள் அமைக்கக்கூடாது. தாழ்வாக மின்வயர்கள் சென்றால் அதுகுறித்து வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். தென்பென்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை பொறுத்தவரையில் மத்திய அரசு கொடுத்த திட்ட அறிக்கையில் சில விளக்கங்கள் தமிழக அரசு கேட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வில் உள்ளது. கூட்டுறவு வங்கிகள் அனைத்து லாபகரமானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
செறிவூட்டப்பட்ட அரிசி உணவு
கூட்டத்தில், பொது வினியோகத்திட்டத்தின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதையொட்டி மக்களிடையே அந்த அரிசி மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் விவசாயிகளுக்கு வழங்கினார்.