ரூ.1¾ கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
சிவகிரி அருகே தென்மலை பகுதியில் ரூ.1¾ கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
சிவகிரி:
சிவகிரி அருகே தென்மலை ஊராட்சியில் கடந்த 10 வருடங்களாக சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதாகவும், இதனை சீரமைக்க வலியுறுத்தியும் தென்மலை, சுப்பிரமணியாபுரம், அருகன்குளம், செந்தட்டியாபுரம் புதூர் ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் பிரதம மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 86 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை தென்மலை வடகாசியம்மன் கோவில் முன்பாக வைத்து நடைபெற்றது. வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட உதவி செயற்பொறியாளர் மகிழமுத்து (சா.பா), வாசுதேவநல்லூர் ஒன்றிய உதவி பொறியாளர் அருள் நாராயணன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.