சுற்றுலா பயணிகளை கவரும் புதிய நீர்வீழ்ச்சி
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய நீர்வீழ்ச்சி உள்ளது.
'மலைகளின் இளவரசி' என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுப்பது இங்குள்ள நீர்வீழ்ச்சிகள் தான். வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி ஆகியவை கொடைக்கானலின் முக்கிய நீர்விழ்ச்சிகளாக திகழ்ந்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிகளை தான் பார்வையிட்டு ரசித்தனர். ஆனால் இந்த நீர்வீழ்ச்சிகள் தவிர வெளி உலகத்துக்கு தெரியாமல் ஏராளமான நீழ்வீழ்ச்சிகளும் கொடைக்கானலில் உள்ளன.
அதுபோன்ற ஒரு நீர்வீழ்ச்சி தான் பள்ளங்கி கோம்பை அருகே பெப்பர் நீர்வீழ்ச்சி என்ற பெயரில் உள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வில்பட்டி ஊராட்சி பள்ளங்கி கிராமத்தில் இருந்து கோம்பை வழியாக பெருங்காடு வரை தங்களது சொந்த வாகனங்களில் செல்லலாம். பின்னர் அங்கிருந்து தனியார் ஜீப்புகள் மூலம் நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்தை அடையலாம். இந்த நீர்வீழ்ச்சி குறித்து அறிந்ததும் கொடைக்கானலுக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மலைகள் சூழ்ந்து இயற்கை எழிலுடன் ரம்யமாக காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சியில் அருவி போல் கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டும், பாறைகள் மீது சறுக்கி விளையாடியும் மகிழ்கின்றனர்.