வேலை கிடைக்காததால் கஞ்சா செடி வளர்த்து வருமானம் ஈட்டிய வடமாநில வாலிபர் - கோவையில் பரபரப்பு


வேலை கிடைக்காததால் கஞ்சா செடி வளர்த்து வருமானம் ஈட்டிய வடமாநில வாலிபர் - கோவையில் பரபரப்பு
x

கோவை அன்னூரில் மூன்று மாதமாக கஞ்சா செடி வளர்த்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வடமாநில வாலிபர்கள் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அன்னூர் போலீசார் கணேசபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவரது பெயர் ரபீன்ந்தர பரிடா(37)என்பதும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக அதே பகுதியில் தங்கி தனியார் ஆலையில் பணியாற்றி வருவது தெரியவந்தது.

மேலும் இவர் கடந்த சில மாதங்களாக தான் தங்கி இருக்கும் குடியிருப்புக்கு அருகே கஞ்சா விதைகளை தூவி கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார், அங்கு சோதனை செய்ததில் சுமார் மூன்று மாதமாக வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து வளர்க்கப்பட்ட கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் வேலை இல்லாததால் கஞ்சா விற்பனை செய்தால் வருமானம் கிடைக்கும் என்பதால் கஞ்சா செடி பயிரிட்டதாகவும் அதனை விற்பனை செய்ய முயன்ற போது தான் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்த அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story