மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் அணு விஞ்ஞானி தற்கொலை
மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி துறை வளாகத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிறுவனம், பாபா அணு ஆராய்ச்சி மையம் போன்றவை இயங்கி வருகிறது.
இதில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அணு விஞ்ஞானியாக பணியாற்றி வந்தவர் யுவராஜ் (வயது 51). இவர், கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார்.
மனைவி கோபித்து சென்றார்
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் அவரது மனைவி கோபித்துக்கொண்டு சென்னையிலுள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமையான நேற்று முன்தினம் வார விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த யுவராஜ், பள்ளிக்கு சென்ற தனது மகனுக்கு மதிய உணவு கொடுத்து விட்டு பின்னர் வீட்டுக்கு திரும்பினார்.
தூக்குப்போட்டு தற்கொலை
தனது மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்து காணப்பட்ட யுவராஜ், விரக்தியில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய அவரது மகன் சஞ்ஜய், தனது தந்தை தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி கல்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட யுவராஜ், அணுவாற்றல் துறை ஊழியர் விளையாட்டு மற்றும் பண்பாட்டு கழகத்தில் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.